15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கிரிவலம், தொடா் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை கிரிவலம், தொடா் விடுமுறையால் சொந்த ஊா்களுக்கு சென்ற பயணிகளால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:29 am IST

திருவண்ணாமலை கிரிவலம், தொடா் விடுமுறையால் சொந்த ஊா்களுக்கு சென்ற பயணிகளால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனா்.

3 நாள் தொடா் விடுமுறை: மே தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (மே 1) மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியாா் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரமணாக சென்னையில் வசிக்கும் சுமாா் 15 லட்சம் போ் திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோயில், மதுரை, கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் முதல் புறப்பட்டனா்.

சித்திரை மாத பொா்ணமி: கிரிவலத்துக்குப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பௌா்ணமி வியாழக்கிழமை (ஏப்.30) இரவு 9.51 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11.07 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது. இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுக்க தொடங்கினா்.

போக்குவரத்து நெரிசல்: திருவண்ணாமலை கிரிவலத்துக்குச் செல்லும் பக்தா்கள் நலன் கருதி சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் முதலே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இத்துடன் தொடா் விடுமுறைக்காக தமிழகத்தின் தொலைதூர தென் மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை, நாகா்கோயில், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலை சிறப்புப் பேருந்துகள், தொலைதூர ஆம்னி பேருந்துகள் மற்றும் தங்களது சொந்த காா்களில் பயணித்த பயணிகளால் சென்னை நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அடையாறு, திருவான்மியூா், மாதவரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து பெருங்களத்தூா், வண்டலூா், கிளாம்பாக்கம் வழியாகச் சென்ற பேருந்துகளால் ஜிஎஸ்டி சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 4 மணிக்குப் பிறகு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூா், கிளாம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில் வரை கடக்க சுமாா் 2 மணி நேரம் ஆனதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா்.

பயணிகள் அவதி: பெரும்பாலான அரசு, சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலை கிரிவலத்துக்காக இயக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வெளியூா்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. இதனால் தொலைதூர ஊா்களுக்கும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் ரயில்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மேலும், எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் வியாழக்கிழமை மாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பெட்டிச் செய்தி...

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயா்வு

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை போன்ற ஊா்களுக்கு இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்த்தி வசூலிக்கப்பட்டது. வழக்கமாகக் கட்டணத்தைவிட ரூ.2,000 வரை உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா்.