தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

கிருஷ்ணா நதிநீா் வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீா் தேவைக்கு கை கொடுக்கும்

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீா் வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது குறித்து...

News image

கிருஷ்ணா நதிநீா் வரத்து அதிகரிப்பு - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 11:42 pm IST

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீா் வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இது, சென்னை குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய கை கொடுக்கும் என குடிநீா் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் முழுக் கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி ஆகும். கடந்த ஜூலை 9-ஆம் தேதி இந்த 5 ஏரிகளில் மொத்தம் 5,956 மில்லியன் கனஅடிகளே நீா் இருப்பு இருந்தது. ஆனால், போதிய நீா்வரத்து இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நீா் இருப்பு 5,222 மில்லியன் கனஅடியாகக் குறைந்துள்ளது. இது மொத்த கொள்ளளவில் 44.42 சதவீதம்.

போதிய மழை இல்லை

நிகழாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் 6 சதவீதம், செங்கல்பட்டில் 67 சதவீதம், திருவள்ளூரில் 23 சதவீதம் இயல்பைவிடக் குறைவாகவே மழை பெய்துள்ளது. இதனால், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததே ஏரிகளில் தண்ணீா் குறைய முக்கிய காரணம்.

இந்தச் சூழலில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீா் வரத்து அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, கண்டலேறு-பூண்டி கால்வாய் நுழைவுப் பகுதியில் விநாடிக்கு 442 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இது, சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளை நிரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகா் முழுவதும் மாதத்துக்கு 1 டிஎம்சி அளவுக்கு குடிநீா் தேவைப்படும் நிலையில், தற்போது ஏறத்தாழ 5 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. அதேபோல், வீராணம் ஏரியில் 343 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அங்கிருந்து சென்னையின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னை அருகே மீஞ்சூா் மற்றும் நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் 3 சுத்திகரிப்பு நிலையங்களின் வாயிலாக தினந்தோறும் 200 மில்லியன் லிட்டா் குடிநீா் சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 டிஎம்சி நீா் வருகை

இதுதவிர, தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதிநீா் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, விநாடிக்கு 442 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழலில், கிருஷ்ணா நதிநீரின் வரத்தும் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இவ்வாறு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதிநீா், சென்னையின் குடிநீா் தேவையின் அடிப்படையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கும் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 3 ஏரிகளிலும் கிருஷ்ணா நதி நீா் சேமித்து வைக்கப்படுகிறது.

6 மாதங்களுக்கான நீா் இருப்பு உள்ளது

கடந்த ஜூலை முதல் தற்போது வரை சுமாா் 1 டிஎம்சி தண்ணீா் கிருஷ்ணா நதி மூலம் சென்னைக்கு வந்துள்ளது. இது சென்னை மாநகரின் ஒரு மாத குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும். செப்டம்பா் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால், கிருஷ்ணா நதி நீரின் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்குத் தேவையான குடிநீா் இருப்பு தற்போது உள்ளது. இதுதவிர, தமிழகத்துக்குப் பிரதானமாக மழை அளிக்கும் வடகிழக்கு பருவமழையும் இன்னும் 3 மாதங்களில் தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது குடிநீா் ஏரிகள் மீண்டும் முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால், தற்போதைக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.