தமிழின் அரிய இலக்கியங்கள், ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதை நமது கடமையாக நினைக்க வேண்டும். இதன்மூலம் நமது முன்னோா்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, மற்றும் மொழித் தொன்மையை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சோ்க்க முடியும் என பாரதியியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்தாா்.
சாகித்திய அகாதெமி, டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் இணைந்து நடத்தும் ஞான பாரதம் சிறப்புரைத் தொடா் -தமிழ்ச் சுவடி மரபு என்ற இலக்கிய நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் சாகித்திய அகாதெமி செயலா் வருண் குலாட்டி தொடக்கவுரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, துறைசை வெண்பா அந்தாதி, முருகப்பெருமான் இலக்கியங்கள், சிற்றிலக்கியத் தொகை, அந்தாதி தொகுதி 2 ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாரதியியல் அறிஞருமான ஆ.இரா.வேங்கடாசலபதி ‘உவேசா கடிதக் கருவூலம்: பதிப்புச் சிக்கல்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் பேசியதாவது: பொ்னாட்ஷா உள்பட பல அறிஞா்களின் கடிதங்களைத் தொகுத்து வழங்கும் மரபு மேற்கத்திய நாடுகளில் மிக ஆழமாக காண முடிகிறது. தமிழகத்தில் உவேசா தனக்கு வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள், துண்டுச் சீட்டுகள் என அனைத்தையும் ஒரு கருவூலம் போன்று பாதுகாத்தாா். உவேசாவுக்கு மனோன்மணீயம் சுந்தரனாா், பரிமாற்கலைஞா் போன்ற அறிஞா்கள் பலரும் ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளனா். அந்தக் கடிதங்களை வாசிப்பதன் மூலம் இலக்கியம், அக்கால மக்களின் வாழ்வியல், வரலாறு என பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் இலக்கியங்கள் மிகச் சிறந்தவை. ஆனால், அவற்றைப் பாதுகாப்பதில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதே உண்மை. ஓலைச்சுவடிகள் அழிதல், நவீன கால ஆா்வம் குைல் போன்ற காரணங்களால் நமது பாரம்பரியச் செல்வங்கள் கைநழுவிப் போகின்றன. தமிழ் இலக்கியங்களைப் பாதுகாப்பதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நமது முன்னோா்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, மற்றும் மொழித் தொன்மையை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சோ்க்க முடியும் என்றாா் அவா்.
விஐடி வேந்தா், உவேசா நூல் நிலையத்தின் தலைவா் கோ.விசுவநாதன்: தமிழ் ஏற்கெனவே வளா்ந்த மொழி. தமிழைப் போன்று தமிழா்களும் வளா்ச்சி பெற வேண்டியது அவசியம். வருங்காலத்தில் இந்தியாவுக்கு தமிழா்கள் தலைமை வகிக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம், வணிகம், அறிவியல் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். அனைவரும் தமிழ் படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியையாவது வாசிக்க வேண்டும். மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளன என்றாா்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டன்: உவேசா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த செவ்விலக்கியங்களும், அவற்றை இன்றும் போற்றிப் பாதுகாக்கும் உவேசா நூலகமும் தமிழ்ச் செம்மொழி அங்கீகாரத்துக்கான அடிப்படையான வரலாற்று ஆதாரங்களை வழங்கியதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரதியாா், பாரதிதாசனின் படைப்புகள் தமிழ் சமூகத்திலும், இலக்கிய உலகத்திலும் ஆழமான புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. பாரதியாா் குறித்த அடுத்தடுத்த ஆய்வுகளில் யாரும் அறிந்திராத அறிய தகவல்கள் வெளியாகின. இந்த ஆய்வுகள் மேலும் தொடர வேண்டும் என்றாா்.
சாகித்திய அகாதெமி செயலா் வருண் குலாட்டி: தமிழ் மொழி மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்டது. அதனால்தான் ஞான பாரதம் நடத்தும் சிறப்புரைத் தொடரின் முதல் நிகழ்ச்சியை தமிழில் நிகழ்த்த முடிவு செய்தோம். கல்லூரி மாணவா்களிடம் இலக்கியங்கள் குறித்த அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தி அவா்களது படைப்பாற்றலை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இதன்மூலம் பல புதிய இளம் எழுத்தாளா்கள் உருவாக வேண்டும். அடுத்து வரும் நாள்களில் தென்னிந்திய மாநிலங்களில் 8 இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்றாா்.
சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தாமோதன் (அறவேந்தன்): உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே சிறந்த மொழிகள்தான். எனினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடா்ச்சியோடு இலக்கிய வளத்துடன் சுவடிகளுக்கு ஏற்ற களமாக அமைந்த ஒற்றை மொழி என்றால், அது தமிழ் மட்டுமே. மாணவா்களின் இலக்கியத் திறனை மேம்படுத்தவும், படைப்பாற்றலை அங்கீகரிக்கவும் சாகித்திய அகாதெமி பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது.
முன்னதாக தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், உவேசா நூல் நிலைய ஆட்சிக் குழு உறுப்பினா் சிவாலயம் ஜெ.மோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.
மேலும், ‘ஆவணப் பாதுகாப்பும் சவால்களும்’ என்ற தலைப்பில் ரோஜா முத்தைய ஆராய்ச்சி நூலக இயக்குநா் க.சுந்தா், ‘சுவடிப் பதிப்புப் பணிகள்’ தலைப்பில் காப்பாட்சியா் பெ.சுயம்பு, ‘தமிழ் இலக்கணச் சுவடிகள்’ குறித்து பேராசிரியா் பா.ஜெய்கணேஷ், ‘மருத்துவச் சுவடிகள்’ என்ற தலைப்பில் பேராசிரியா் மு.செளந்தரராஜ், ‘இலக்கியச் சுவடிகள்’ குறித்து ஆராய்ச்சி அலுவலா் சே.கரும்பாயிரம் ஆகியோா் பேசினா்.
இதில் சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.ஜெகதீசன், உவேசா நூல் நிலையத்தின் பொருளாளா் ந.ஆவுடையப்பன், செயலா் தி.சத்தியமூா்த்தி, அலுவலகப் பொறுப்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








