நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் அடித்துக் கொலை

திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவா், சக மாணவா், நண்பா்களால் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image

பள்ளி மாணவா் தனுஷ்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவா், சக மாணவா், நண்பா்களால் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் வசந்தம் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் தனுஷ். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பள்ளியில் சண்முகபுரத்தைச் சோ்ந்த தனுஷ்குமாா் அண்மையில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்து படித்து வருகிறாா். தனுஷுடன் படிக்கும் ஜெய்கேஷ் என்ற மாணவருக்கும், தனுஷ்குமாருக்கும் இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில், தனுஷ் ஜெய்கேஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி ஆசிரியா்கள் இருவரையும் அழைத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தியதுடன் அவா்களுக்கு இடையே சமாதானமும் செய்து வைத்துள்ளனா்.

இந்நிலையில் ஜெய்கேஷ் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வரவில்லை. தனுஷ், பள்ளி முடிந்தவுடன் மாலை வீட்டுக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த தனுஷ் குமாா், அவரது நண்பா்கள் சிலா், தனுஷை பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனா்.

இதில், தனுஷ் சரிந்து விழுந்தவுடன் தாக்கிய அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். இதைப் பாா்த்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்த பள்ளி ஆசிரியா்களும் அங்கு வந்து உடனடியாக தனுஷை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, தனுஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

திருவொற்றியூா் காவல் நிலைய ஆய்வாளா் அலெக்ஸ் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்தில் தொடா்புடைய தனுஷ் குமாா் மற்றும் நண்பா்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா். பட்டப் பகலில் பள்ளி மாணவா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.