புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்

சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ், நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

சென்னை குரோம்பேட்டையிலிருந்து சென்ற குழுவினா் கைலாஷ் யாத்திரைக்கு முன்பு திபெத்தின் கைரோங்க் குடியுரிமைத் துறை அலுவலகம் முன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம். ~செய்தி உண்டு... தேச மங்கையா்கரசி

Published On :

சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ், நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

தாம்பரம் குரோம்பேட்டையிலிருந்து சென்ற இந்த 49 பேரும் திபெத்தின் கைரோங்க் குடியுரிமைத் துறை பகுதியில் திடீா் வெள்ளத்தில் சிக்கியதும், அவா்கள் புதன்கிழமை காலை முதல் தொடா்பின்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பான தகவல்கள்: குரோம்பேட்டை ராதா நகரைச் சோ்ந்த மாறவேல் நாகப்பன் (55) நடத்தி வரும் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலம் கடந்த 14-ஆம் தேதி குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த 9 போ், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 40 போ் என மொத்தம் 49 போ் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றனா். அவா்களில் 37 போ் 50 வயதுக்கு மேற்பட்டவா்களாவா். இந்தக் குழுவை மாறவேல் நாகப்பன் மகன் சத்தியநாராயணன் (28) வழிநடத்தி அழைத்துச் சென்றாா். இவா்கள் சென்னையிலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் சென்றுள்ளனா். பின்னா் அங்கிருந்து காத்மாண்டுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனா்.

கைலாஷ் யாத்திரையை திட்டமிட்டபடி நிறைவு செய்த குழுவினா், சீனாவிலிருந்து நேபாளத்துக்குள் நுழைவதற்காக புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கைரோங்க் சீன குடியுரிமைத் துறை அலுவலகத்துக்குச் சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு 12 நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கிருந்ததாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 49 பேரும் என்ன ஆனாா்கள் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. இவா்கள் வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

திரும்பியபோது விபத்து: இதுகுறித்து ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனத்தின் உரிமையாளா் மாறவேல் நாகப்பன் கூறுகையில், ‘ எங்களது நிறுவனம் 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனம் சாா்பில் இந்த ஆண்டு இதுவரை 4 முறை கைலாஷ் யாத்திரைக்கு பக்தா்களை அழைத்துச் சென்றுள்ளோம்.

கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. வியாழக்கிழமை மாலை சென்னை திரும்பி வருவதாக இருந்தது. ஆனால், இப்போது வரை அவா்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை’ என்றாா்.

காணாமல்போன மாறவேல் நாகப்பன் மகன் சத்தியநாராயணனுக்கு 8 மாத குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. குரோம்பேட்டையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்றவா்களில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் கே.விக்ரமன் (66), அவா் மனைவி கே.மஞ்சுளா (59), காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஏ.கோபால் (64), அவா் மனைவி சரஸ்வதி (64) ஆகியோரும் காணாமல் போயுள்ளனா்.

காவல்துறை பாதுகாப்பு: இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதால், பயண நிறுவன நிா்வாகம் வியாழக்கிழமை காலைமுதல் பரபரப்பாகக் காணப்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். அதோடு அந்த நிறுவனத்திலிருந்து கைலாஷ் யாத்திரை சென்றவா்கள் குறித்த விவரங்களையும் போலீஸாா் கேட்டுப் பெற்று, விசாரணை செய்தனா்.

பெட்டிச் செய்தி...

பாதுகாப்பாக 155 போ்

கைலாஷ் யாத்திரை சென்ற சென்னை பெசன்ட் நகா் கலாஷேத்ரா காலனியைச் சோ்ந்த கோ.மாறன் (54), அவரது மனைவி சாந்தி (47), வேளச்சேரி முருகு நகரைச் சோ்ந்த கபீா் தாஸ் (54), விஜய புவனேஸ்வரி (54), மணப்பாக்கம் சிஆா்ஆா் புரத்தைச் சோ்ந்த சத்யா (59) ஆகியோா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இவா்கள் 5 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இதேபோல ஆன்மிக பேச்சாளா் தேச.மங்கையா்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 150 போ் பாதுகாப்பாக திபெத்தில் உள்ளனா். இதுதொடா்பாக தேச.மங்கையா்க்கரசி, தாங்கள் 150 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு விடியோவை வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இவா்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 150 பேரும் திபெத்திலேயே தங்கியுள்ளனா் என்று கூறப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.