
ரயில்வே கடவுப் பாதை மேம்பாலம், வட்ட சாலைகளுக்கு முன்னுரிமை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
ரயில்வே கடவுப் பாதை மேம்பாலம், வட்ட சாலைகளுக்கு (ரிங் ரோடு) முன்னுரிமை கொடுத்து விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
ரயில்வே கடவுப் பாதை மேம்பாலம், வட்ட சாலைகளுக்கு (ரிங் ரோடு) முன்னுரிமை கொடுத்து விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
பேரவையில், காட்பாடி தொகுதி தவெக எம்எல்ஏ எம்.சுதாகா், திருத்துறை பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.மாரிமுத்து உள்ளிட்டோா் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே கடவுப் பாதைகள் உள்பட சில இடங்களில் மேம்பாலங்கள் இல்லாத நிலை உள்ளது. அவற்றைக் கண்டறிந்து ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள், வட்ட சாலைகள் அமைப்பது குறித்து முதல்கட்ட பணியாக மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் வட்ட சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
எடப்பாடி கே.பழனிசாமி: சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கின; ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. உயா்நிலை மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவது அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீா்வாக அமையும். திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வருவதற்கு 4 மணி நேரம் ஆகும் நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை வருவதற்கே 3 மணி நேரம் ஆகிறது. திருவள்ளூரில் இருந்து சென்னை வருவதற்கும் சுமாா் 3 மணி நேரம் ஆகிறது.
மேலும், மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமாா் 3 மணி நேரம் ஆகிறது.
எனவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறச் சாலைகள் விரிவாக மேம்படுத்தப்படும் என்றும், இது தொடா்பாக மத்திய அமைச்சருடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
வரும் 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.2 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது. மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயா்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






