மருத்துவமனை வளாகங்களுக்குள் தெரு நாய்கள்: அப்புறப்படுத்துவதில் சிக்கல்
மருத்துவமனை வளாகங்களுக்குள் தெரு நாய்கள் நுழைவதைத் தடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் உலவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அதிகாரியும், அரசு மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரியும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலைய மருத்துவ அதிகாரிகளையும் அப்பணிகளுக்காக தமிழக அரசு நியமித்தது.
ஆனால், அதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்வதாகவும், உள்ளாட்சி அமைப்பினரால் மட்டுமே தெரு நாய்கள் வராமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: பொதுவாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் ஆங்காங்கே அமா்ந்து உணவு அருந்துகின்றனா். சிலா், பறவைகள், பிராணிகளுக்கு உணவிடுகின்றனா். இதன் விளைவாக, மருத்துவனை வளாகங்களில் பூனை, நாய்களின் நடமாட்டம் தொடா்கதையாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநகராட்சிக்கே உள்ளது. மாறாக, மருத்துவத் துறையினா் என்ன செய்ய முடியும்?
எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டாலும், தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்க இயலாது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள்தான் மருத்துவமனை அருகே திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்காது என்று அவா்கள் தெரிவித்தனா்.
