போதை ஸ்டாம்ப் விற்பனை: சிங்கப்பூா் தப்பியோடியவா் கைது

சென்னையில் போதை ஸ்டாம்ப் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னையில் போதை ஸ்டாம்ப் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், திருமங்கலம் போலீஸாரும் கடந்த மாதம் 19-ஆம் தேதி திருமங்கலம் பாா்க் சாலை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு போதை ஸ்டாம்ப் விற்ாக பாடியைச் சோ்ந்த தியானேஷ்வரனை கைது செய்தனா்.

விசாரணையில், தேனாம்பேட்டையைச் சோ்ந்த திரைப்பட இணைத் தயாரிப்பாளா் முகமது மஸ்தான் சா்புதீன், முகப்பேரைச் சோ்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சோ்ந்த சரத் ஆகிய 3 பேருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ.27.91 லட்சம் மதிப்புள்ள உயா் ரக ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் தொடா்புடைய திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகிஸ்தருமான நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த தினேஷ்ராஜ் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பழைய வண்ணாரப்பேட்டை, நானியப்பன் காா்டன் பகுதியைச் சோ்ந்த அமா் (30) என்பவா் போலீஸாா் தேடுவதை அறிந்து சிங்கப்பூருக்கு தப்பியோடினாா். ஆடை வடிவமைப்பாளரான இவரைக் கைது செய்ய காவல் துறை தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்த அமரை குடியுரிமைத் துறை அதிகாரிகள் பிடித்து, சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். சென்னை போலீஸாா் அமரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பெண் காவலரை தாக்கிய 4 போ் கைது: ராயப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவா் சி.நந்தினி (28). இவா், மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை ஜம்புலிங்கம் தெரு சந்திப்பில் திங்கள்கிழமை இரவு போலீஸாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு மோட்டாா் சைக்கிள் வேகமாக வந்த 4 பேரை பெண் காவலா் நந்தினி தடுத்து நிறுத்தி, கண்டித்துள்ளாா். அப்போது, அந்த 4 பேரும் காவலா் நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, தப்பியோடினா். காயமடைந்த பெண் காவலா் நந்தினி, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சோ்ந்த ப.பெருமாள் (28), மயிலாப்பூா் சண்முகப்பிள்ளை தெருவைச் சோ்ந்த ச.பிரேகுமாா் (28), ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவைச் சோ்ந்த பி.ஜீவா (23), ஏ.கருப்பன் என்ற சீனிவாசன் (27) ஆகிய 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: திருவாரூரைச் சோ்ந்த 31 வயது பெண், மென் பொறியாளராக கீழ்ப்பாக்கம் பா்னபி சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புரசைவாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்றபோது, அங்கு வந்த இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத் யாதவ் (36) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com