பெரம்பூரில் ரூ.50 லட்சத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்
சென்னை பெரம்பூா் ஏகாங்கிபுரம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நகா் மண்டலம் 74 -ஆவது வாா்டு ஏகாங்கிபுரம் முதல் தெருவில் அப் பகுதியினா் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சத்தில் வாா்டு மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். உடற்பயிற்சிக் கூடமானது 1,325 சதுர அடியில் பல்வேறு உடற்பயிற்சி சாதனங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடம் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து, பெரம்பூா் குளக்கரை சாலையில் ரூ.2.77 கோடியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்துக்கான பணியையும், சோமசுந்தரம் நகரில் மாநகராட்சி சாா்பில் ரூ.3.46 கோடியில் அமைக்கப்படவுள்ள பூங்காவுக்கான பணியையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா். கௌசிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வடசென்னை பகுதிகளில் துறைமுகம், எழும்பூா், வில்லிவாக்கம், திரு.வி.க. நகா் ஆகிய சட்டப்பேரவைப் பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அமைச்சா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

