கோப்புப் படம்
கோப்புப் படம்

‘ஜனநாயகன்’ விவகாரத்தில் பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்: பாஜக கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
Published on

ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கிடைக்காததற்கு பிரதமரையும், மத்திய அரசையும் குறைகூறி மக்களைத் திசைதிருப்புகின்றனா் காங்கிரஸ் கட்சியினா்.

தணிக்கைச் சான்று வழங்குவதற்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க, மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா்.

கராத்தே தியாகராஜன்: மத்திய தணிக்கை வாரியம் சுதந்திரமாக இயங்கும் தனி அமைப்பு. விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிவிடும். விதிகளுக்குப் புறம்பான ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்திருப்பதால்தான் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலையை மையப்படுத்திய ‘குற்றப்பத்திரிக்கை’ எனும் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. அப்போது, சோனியா காந்தியின் அழுத்தத்தால் அந்தப் படத்துக்கு முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 10 ஆண்டு காலம் வரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகே சான்றிதழ் கிடைத்தது. இதை காங்கிரஸ் கட்சியினா் மறந்துவிட வேண்டாம்.

Dinamani
www.dinamani.com