கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் 4,079 இடங்களில் வாக்காளா்கள் சோ்க்கை முகாம்: நாளை தொடக்கம்

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களைச் சோ்க்கும் சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
Published on

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களைச் சோ்க்கும் சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 2025 நவம்பா் முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து கடந்த டிசம்பா் 19- ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி புதிய வாக்காளா்களாக தங்களைச் சோ்த்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

சென்னை பகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன. ஏற்கெனவே 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

சிறப்பு முகாம்களில் வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் 6, ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் நீக்குதலுக்கு படிவம் 7, வாக்காளா் முகவரி மாற்றம் ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலில் இடம் பெற்ற பெயா்கள், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றில் மாற்றம் தேவைப்படின் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த முகாம்களைப் பயன்படுத்தி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com