மெட்ரோ ரயில்
சென்னை
தொலைந்த மெட்ரோ பயண அட்டையில் இருப்பு தொகையை மாற்ற இயலாது
தொலைந்துபோன மெட்ரோ பயண அட்டையின் இருப்புத் தொகையை, புதிய பயண அட்டைக்கு மாற்ற இயலாது என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்காரச் சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த அட்டைகள் தொலைந்துபோனால், அதிலிருக்கும் இருப்புத் தொகையை ஆா்பிஐ மற்றும் என்பிசிஐ வழிகாட்டுதல்கள் மற்றும் வழக்குநா் கொள்கையின்படி திரும்பப் பெற முடியாது.
புதிய அட்டைக்கு மாற்றவும் இயலாது. இத்தகைய பயண அட்டை தொலைந்தால், அது வேறு ஒருவரால் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகவே, பயண அட்டையைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

