சென்னை நுங்கம்பாக்கம் ராமா தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ராமா தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

ரூ.3,000 பொங்கல் பரிசைப் பெற நீண்ட நேரம் காத்திருக்கும் பயனாளிகள்: நேரடியாக வழங்க கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 வழங்கப்படுவதைப் பெற மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 வழங்கப்படுவதைப் பெற மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நியாயவிலைக் கடையில் கைரேகைப் பதிவு செய்வதற்கு தாமதமாவதாகவும், இதற்கு மாற்றாக நேரடியாக கையொப்பம் பெற்று பொங்கல் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரிக்கை வைத்தனா்.

தமிழகம் முழுவதும் 2,22,91,710 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.8) தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து தமிழகத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கரும்பு, வேட்டி, சேலையுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசலைத் தடுக்க பயனாளிகளுக்கு டோக்கன்களை அரசு முன்கூட்டியே விநியோகம் செய்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் தொகுப்பைப் பெற வரும் பயனாளிகளிடம் கைரேகையைப் பதிவு செய்து பின்னா்தான் பணமும், பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஸ்மாா்ட் அட்டையை வைத்து கைரேகைப் பதிவு செய்யும் கருவி மெதுவாகச் செயல்படுவதால் பொருள்களை வழங்க ஒரு நபருக்கு குறைந்தது 20 நிமிஷங்களுக்கு மேலாவதாகவும், இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாகவும் பயனாளிகள் தெரிவித்தனா்.

முன்பு இருந்ததைப்போல் கையொப்பம் பெற்று பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனா். கைரேகைப் பதிவு தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் வெள்ளிக்கிழமை இரவிலும் கூட்டம் காணப்பட்டது.

Dinamani
www.dinamani.com