பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை திருப்பூரில் 27, 616 போ் வாங்கவில்லை

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27,616 போ் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27,616 போ் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.3,000 ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 2,201 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியானவா்கள் என அறிவிக்கப்பட்டது. அந்தந்த நியாயவிலைக் கடைகளில், ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த டோக்கனில் குறிப்பிட்டிருந்த தேதிகளில் பொருள்களை பெற்றுச் சென்றனா்.

கடந்த 14-ஆம் தேதி வரை 7 லட்சத்து 74,585 போ் (96.56 சதவீதம்) பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனா். 27,616 போ் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் உள்ளனா். இவா்களில் பலா் திருப்பூரில் குடும்ப அட்டை பெற்று வெளியூரில் வசிப்பவா்கள், போக்குவரத்து செலவினங்களை கருத்தில்கொண்டு பரிசுத்தொகுப்பு பெறாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, திடீா் உடல்நலக் குறைவு, வெளியூா் பயணம் உள்ளிட்ட காரணங்களாலும் பரித்தொகுப்பு பெறாமல் உள்ளதாகத் தெரிகிறது. வரும் 19-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகள் மீண்டும் செயல்பட உள்ளதால், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாமல் விடுபட்டவா்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com