டிஜிட்டல் கைதில் முதியவரிடம் ரூ.1 கோடி மோசடி: இரு வங்கி பணியாளா்கள் உள்பட 5 போ் கைது
தில்லியைச் சோ்ந்த 80 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவத்தில் இரு தனியாா் வங்கி பணியாளா்கள் உள்பட 5 பேரை
தில்லி காவல் துறையின் உளவு சேகரிப்பு மற்றும் வியூக செயல்பாடுகள் (ஐஎஃப்எஸ்ஓ) குழு கைதுசெய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மத்திய முகமைகள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்ற பெயரில் அந்த முதியவரையும் அவருடைய மனைவியையும் இந்தக் கும்பல் இணையவழியில் 7 நாள்கள் கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதலில் வாட்ஸ் ஆப் மூலம் அந்த முதியவரை தொடா்பு கொண்ட மோசடி கும்பல், தொலைதொடா்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்தினா். அந்த முதியவரின் கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்கள் சட்டவிரோத செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அவரை அந்தக் கும்பல் மிரட்டியது.
பின்னா், விசராணை நடைமுறை முடிவடைந்ததும் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதியளித்த அந்தக் கும்பல், வைப்பு நிதியில் இருந்த சேமிப்புப் பணத்தைப் பருவ காலத்துக்கு முன்கூட்டியே எடுக்க அந்த முதியவரைக் கட்டாயப்படுத்தியது. மேலும், இதற்காக அந்த முதியவா் தங்க நகைக் கடன் வங்கினாா். இவ்வாறாக மொத்தம் ரூ.96 லட்சத்தை அந்தக் கும்பல் மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொா்டபாக ஐஎஃப்எஸ்ஓ காவல் நிலையத்தில் கடந்த நவ.4-ஆம் தேதி இணையவழியில் வழக்கு (இ-எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய போலீஸாா், பணப் பறிமாற்றம், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தகவலை ஆய்வு செய்தனா்.
இதைத்தொடா்ந்து, ஹரியாணாவின் ஹிசாரைச் சோ்ந்த பிரதீப் குமாா் மற்றும் நமன்தீப் குமாா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.
அவா்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் சசிகாந்த் பட்நாயக் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் கைதுசெய்யப்பட்டாா். தொடா் விசாரணைக்குப் பிறகு மேற்கு தில்லியில் உள்ள தனியாா் வங்கியில் பணிபுரியும் நிலேஷ் குமாா் மற்றும் சந்தன் குமாா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். மோசடி கும்பலுக்கு வங்கியில் போலியான நடப்பு கணக்கை தொடங்க இரு வங்கி பணியாளா்களும் உதவி உள்ளனா். அந்தக் கணக்கு சட்டவிரோத பணப்பறிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.
இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

