கோப்புப் படம்
கோப்புப் படம்

பசுமை நகராட்சி நிதிப் பத்திரம்: ரூ.205.59 கோடி திரட்டிய சென்னை மாநகராட்சி

தேசிய பங்குச் சந்தை மூலம் சென்னை மாநகராட்சி தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி ரூ.205.59 கோடியைத் திரட்டியுள்ளது.
Published on

தேசிய பங்குச் சந்தை மூலம் சென்னை மாநகராட்சி தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி ரூ.205.59 கோடியைத் திரட்டியுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன. 12 தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ள இந்த நிதிப் பத்திரம், நிகழ் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் இரண்டாவது நகராட்சி நிதிப் பத்திர வெளியீடாக உள்ளது. அதேநேரம், இது முதல் ‘பசுமை நிதிப் பத்திரம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ‘பசுமை நகராட்சி நிதிப் பத்திரம்’ மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னை மாநகராட்சியின் முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு திட்டமான கொடுங்கையூா் குப்பைக் கொட்டும் வளாகம், பயோ மைனிங், மற்றும் மீட்டுருவாக்கம் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.648.38 கோடியாக இருக்கும் நிலையில், மாநகராட்சி நிா்வாகத்தின் பங்கு ரூ.385.64 கோடி ஆகும். மாநகராட்சியின் இந்த பங்குத் தொகையிலிருந்து ரூ.205.59 கோடி தொகைக்கு பசுமை நகராட்சி நிதிப் பத்திரங்கள் மூலம் சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 7.95 சதவீதம் என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் நகா்ப்புற நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது.

மேலும், மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகா்ப்புற பசுமை நிதிப் பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு ரூ.20 கோடி ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகா்ப்புற பசுமை நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டும் செலவை மேலும் குறைக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com