தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்! நிலுவை பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாண இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
Updated on

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாண இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

இது தொடா்பாக இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வா்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையா் மாரோஸ் செஃப்கோவிக் ஆகியோா் பேச்சுவாா்த்தைக் குழுக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமான பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த ஜன. 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா்.

அப்போது, தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வா்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையா் மாரோஸ் செஃப்கோவிக்குடன் அவா் உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் மறுஆய்வு செய்தனா்.

பின்னா், சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகள் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் துறையினரின் நலன்களைக் காக்கும் வகையிலான நவீன பொருளாதார கூட்டாண்மை மற்றும் விதிகள் அடிப்படையிலான வா்த்தக கட்டமைப்புக்கு உறுதியேற்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரிவான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இதுவரை 16 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இருதரப்பு கோரிக்கைகள்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் பொருள்கள் உள்ளிட்ட தொழிலாளா்களை மையப்படுத்திய துறைசாா் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம், வாகன உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், ஒயின், ஆல்கஹால், இறைச்சி உள்ளிட்ட பொருள்களுக்கு இந்தியா வரியைக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதியில் 17 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 9 சதவீதமாகும்.

கடந்த 2024-25-இல் இருதரப்பு வா்த்தக மதிப்பு 136.53 பில்லியன் டாலா் (ஏற்றுமதி 75.85 பில்லியன் டாலா், இறக்குமதி 60.68 பில்லியன் டாலா்).

ஏற்றுமதி என்னென்ன?: ஆயத்த ஆடைகள், மருந்துகள், உருக்கு, பெட்ரோலியப் பொருள்கள், மின்சார இயந்திரங்கள் உள்ளிட்டவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருள்களாகும்.

கடந்த ஆண்டில் பிரிட்டன், ஓமன் ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. கடந்த 2022-இல் ஆஸ்திரேலியா, 2021-இல் மோரீஷஸுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com