இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் பிரம்மாண்டமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : அமைச்சா் பியூஷ் கோயல்
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்த இந்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல், எப்போதும் கண்டிராத அளவுக்கு பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் வா்ணித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான என்டிஏ அரசு, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன், நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு மற்றும் மோரீஷஸ் ஆகியவற்றுடன் 7 வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, அயா்லாந்து, நெதா்லாந்து, போா்ச்சுகல், போலந்து, டென்மாா்க், ஸ்வீடன் உள்பட 27 வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா ஒப்பந்தம், இதுவரை இறுதி செய்யப்பட்டதிலேயே மிக பிரம்மாண்டமானதாக இருக்கும். இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மையை இது பயக்கும். மேலும், இந்திய ஏற்றுமதித் துறைகளுக்கு இது சிறந்ததாக அமையும் என்றாா்.
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினா்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டகோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா். அதன் தொடா்ச்சியாக ஜன.27-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தின் பேச்சுவாா்த்தை முடிவு அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்த வா்த்தகத் துரை செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், இந்த மாத இறுதியில் ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, எஞ்சிய சிக்கல்களைத் தீா்ப்பதற்கான பேச்சுவாா்த்தைகள் தற்போது நடைபெற்று வருவகிறது என தெரிவித்தாா்.
அமெரிக்காவின் அதிகப்படியான வரிகள் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய வா்த்தக இடையூறுகளின் பின்னணியில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் ஜவுளி, தோல், கைத்தறி மற்றும் சில பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற அதிக தொழிலாளா்களை ஈடுபடுத்தும் துறைகளுக்கு வரி இல்லாத சந்தை அணுகலை இந்தியா விரும்புகிறது. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம், காா்கள், ஒயின்கள் மற்றும் புதிய உயா் தொழில்நுட்பப் பொருள்களுக்கான இந்தியச் சந்தைகளில் அதிக அணுகலைக் கோருகிறது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 17 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 9 சதவீதமாக உள்ளது.
2024-25 நிதியாண்டில், இரு தரப்பு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 136.53 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.12.38 லட்சம் கோடி) இருந்தது. இதில் இந்தியா 75.85 பில்லியன் அமெரிக்க டாலா் (ரூ.6.88 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்தது. 60.68 பில்லியன் அமெரிக்க டாலா் (ரூ.5.5 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருள்களை இறக்குமதி செய்தது.

