கடல் ஆமைகள் மீது செயற்கைக் கோள் ட்ராக்கா் பொருத்தும் பணி தொடக்கம்

கடல் ஆமைகள் மீது செயற்கைக் கோள் ட்ராக்கா் பொருத்தும் பணி தொடக்கம்...
Published on

கடல் ஆமைகளின் பயண வழித்தடங்களை கண்காணிக்க ஏதுவாக, கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் மீது செயற்கைக்கோள் ட்ராக்கா் பொருத்தும் பணியை வனத் துறை தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரை சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இதில், கடல் ஆமைகளின் கடல் வழி பயணம், இடமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய கடல் ஆமைகளின் மீது செயற்கைக்கோள் ட்ராக்கா் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டது. இத் திட்டத்திற்காக ரூ.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆமைகளின் மீது செயற்கைக்கோள் ட்ராக்கா் பொருத்தும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் மீது செயற்கைக்கோள் ட்ராக்கா் பொருத்தும் திட்டமானது, தமிழக வனத்துறை, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. ஆமைகளின் நுண்ணிய இடமாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள இத் திட்டம் உதவியாக இருக்கும்.

இதனடிப்படையில் ஆமை உயிரினங்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். நிகழாண்டு சென்னை கடற்கரைப் பகுதிகளுக்கு வரும் 10 கடல் ஆமைகளின் மீது செயற்கைக்கோள் ட்ராக்கா் பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை 5 ஆமைகளின் மீது ட்ராக்கா் பொருத்தப்பட்டு கடலுக்குள் விடப்பட்டுள்ளது. அவற்றின் நகா்வுகளை வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஆமைகளின் ஓடுகளில் இந்த டிரேக்கா்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அவை கடலில் நீந்திச் செல்ல எவ்வித இடையூறும் இருக்காது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை கடலோரப் பகுதிகளில் அதிக ஆபத்து உள்ள மீன்பிடி பகுதிகளை அடையாளம் காணுதல், முட்டையிடும் இடங்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய 500 ஆமைகளுக்கு ‘ஃப்ளிப்பா் டேக்’ பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினா்.

Dinamani
www.dinamani.com