நெடுஞ்சாலைத் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு நெடுஞ்சாலைகள்-சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
சென்னை கொளத்தூா் தொகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.3.50 கோடியில் கொளத்தூா்-பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூா் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டா் நீளம் மற்றும் 7.50 மீட்டா் அகலம் கொண்ட சேவை சாலையின் இருபுறமும் 2 மீட்டா் அகலத்துக்கு நடைபாதை அமைக்கும் பணிகள், கொளத்தூா் செந்தில் நகரில் ரூ.15.42 கோடியில் கட்டப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் ஜி.என்.டி. சாலை, பாடி மேம்பாலம் அருகில் ரூ.155.35 கோடியில் சாலை மற்றும் மேம்பாலத்தை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்தின் பணிகளையும் ஆய்வு செய்தனா். இந்தப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது, சென்னை மேயா் ஆா்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
