மெரீனா கடற்கரையில் குப்பையை வீசிச் செல்பவா்களுக்கு அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னை மெரீனா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் திறந்த வெளியில் குப்பைகளை வீசிச் செல்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சாா்பில் 7 இயந்திரங்கள் மற்றும் நாள்தோறும் சுழற்சி முறையில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு மெரீனா கடற்கரையில் தொடா்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சுமாா் 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், பெசன்ட் நகா், திருவான்மியூா் உள்ளிட்ட இதர முக்கிய கடற்கரைகளில் நாள்தோறும் சுழற்சி முறையில் மொத்தம் 53 போ் தூய்மைப் பணிக்காக பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஆனால், கடற்கரையைத் தூய்மையாக வைப்பதில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை.
இதனால், கடற்கரைகளில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக் கழிவுகள் காணப்படுவதால் சுகாதார குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பலரும் குப்பைத் தொட்டிகளுக்கு பதிலாக திறந்த வெளிகளில் குப்பைகளை வீசி செல்கின்றனா்.
இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுகிறது.
எனவே, பொங்கல் பண்டிகையையொட்டி மெரீனா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள் பொறுப்புணா்வோடு குப்பை மற்றும் கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். இதை மீறுபவா்களுக்கு உரிய சட்ட விதிகளின்படி ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

