கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்

'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:31 pm

வ. ஜெயபாண்டி

'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும். எத்தனையோ கடற்கரைகள் இருந்தாலும், உலக அளவில் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாம் இடம் பிடித்த மெரீனாவுக்கென்று தனி இடமுண்டு. இந்தக் கடற்கரையானது வெறும் மணலால் நிரம்பியதல்ல; பல மனிதர்களின் உணர்வால் நிரம்பியது. இதன் ஆரம்பக் காலமானது அதிசயத்தக்கதாகவே இருக்கிறது.

'மெரி' என்றால் லத்தீன், இத்தாலிய மொழிகளில் 'கடற்கரை' என்று அர்த்தம். 1884- ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் மெரீனா கடலோரம் களிமண் நிறைந்திருந்தன. சென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகே இங்கு மணல் குவியத் தொடங்கியுள்ளது. கடலோரம் மிக நேர்த்தியாக இருந்த மணல் பரப்பு இத்தாலியில் உள்ள பால்மரோ கடற்கரையைப் போல அழகாகவும் இருந்ததைக் கண்ட சென்னை மாகாண ஆளுநர் மெளன்ட் ஸ்வேர்ட்டான் வியந்துள்ளார். அவரே 'மெரீனா பீச்' எனப் பெயரிட்டுள்ளார்.

சுமார் 13 கி. மீ. நீள கடற்கரையான மெரீனா சாலைப் பகுதியிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மெரீனாவின் முக்கியப் பகுதிகளாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் சாந்தோம், பட்டினம்பாக்கம் உள்ளிட்டவை உள்ளன.

Story image

1980-களில் வெண்மணல் பரப்பும் கடற்கரையில் ஆங்காங்கே சிறிய உணவகங்கள், பலூன் விற்போர், குதிரை சவாரி நடத்துவோர், பிரபலங்களின் கட் அவுட்டுகளை வைத்து படம் பிடிக்கும் கேமராக்காரர்கள் போன்றோர் நிறைந்திருந்தனர்.

ஆர்ப்பரிக்கும் அலைகளில் கால் நனைப்போர் குடும்பத்துடனோ, காதலர்களாகவோ ஆங்காங்கே நிறுத்தப்பட்ட படகுகளின் மீதோ, அதன் ஓரத்திலோ அமர்ந்திருப்பர். அவர்களை சிறிய தகர டின்னோடு வந்து, 'சார்...சுண்டல்... கடலை...' எனக்கூவி விற்பனைக்காகப் பரிதாபத்தோடு சிறுவர்கள் நின்றிருப்பர். ஊசி, பாசி என விற்பதுடன் பச்சை குத்திட வலியுறுத்தும் நரிக்குறவர் இன மக்களும் நடமாடினர்.

கடற்கரை நெடுகிலும் உழைப்பாளர் சிலை முதல் மகாத்மா, நேதாஜி, மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர் என சிந்தனை தலைவர்களின் சிலைகளும் தேசப்பற்றை ஊட்டின.

இன்று நீலக்கொடி கடற்கரை அங்கீகாரம் பெருநகரமாகிவிட்ட சென்னையில், மக்கள் நடைப்பயிற்சிக்குரிய இடமாகவும் மெரீனா காலை, மாலையில் மாறிவிட்டது. அதற்கேற்றவாறு நடைப்பயிற்சிக்கும், உடற்பயிற்சிக்கும் வசதிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்துதரப்பட்டுள்ளன. ஆங்காங்கே மரம், செடிகளுடன் அலங்கார சிறிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 'வயோதிகமானாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் மங்கை'யைப் போல மெரீனாவின் பழைய உருவம் தற்போது செயற்கை வடிவமைப்பால் மாற்றப்பட்டு வருகிறது.

மெரீனாவின் வெண்மணலும், கடல் அலையும் என இயற்கைக் காட்சிகள் மெல்ல மெல்ல குறைந்து வணிகவளாகம் போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுவதை நீதிமன்றமே தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் தற்போது மெரீனா தன்னை புதுப்பிக்கும் வகையில் நீலக்கொடி கடற்கரை அங்கீகாரம் சர்வதேச அளவிலான சுற்றுலா அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.

மெரீனாவின் நீச்சல்குளம் பகுதியில் தற்போது சுமார் ரூ.7 கோடியில் 'நீலக்கொடி கடற்கரைத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் மூங்கில் நாற்காலிகள், செயற்கை சிற்பிகளின் வடிவங்கள், இதய வடிவிலான உட்காரும் அமைப்புகள், தன்படம் எடுக்குமிடங்கள், சிறார்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் பெருகிவிட்டன. விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் எனப் படிப்படியாக விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கடலையும், கடற்கரையையும் காணவருவோரைக் காட்டிலும் அங்கே நீங்காத் துயர் கொண்டுள்ள மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களைக் காணவருவோர் அதிகரித்துவிட்டனர். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கடிகாரச் சத்தம் கேட்கிறதா? என காது வைத்து பார்ப்போர் இன்னும் குறையவில்லை.

Story image

காலையில் கடல் அலையை மட்டும் ரசிப்பவர்கள் மாலையில் கண்ணுக்கும் கருத்துக்குமான காட்சிகளையும், ஓசைகளையும் கேட்கும் வகையில் வாரத்தில் இருநாள்கள் கலை நிகழ்ச்சிகள் எனக் களைகட்டிவருகின்றன. மாலை நேரங்களில் கண்ணுக்கும், காதுக்கும் என மனதை இனிமையாக்கும் மணல் தளமாகவும் தற்போது மாறிவிட்டது.

மக்கள் கொண்டுவரும் நெகிழிப்பை உள்ளிட்டவற்றைச் சேகரிக்கும் திட்டமும், மஞ்சப்பை விநியோகிக்கும் இயந்திரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று கால்நனைக்க அவர்கள் வாகனத்தில் செல்லும் வகையில் பலூன் சக்கரங்களுடன் நாற்காலிகளும் உள்ளன.

வாரம்தோறும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் தமிழ்க் கலை வளர்க்கும் விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. தாரை, தப்பட்டை, பரதநாட்டியம், கரகாட்டம், மாடாட்டம், குதிரையாட்டம், நாட்டுப்புற பாடல்கள், மேற்கத்திய பாடல்கள் என எங்கும் இசை அலையுடன், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என சுற்றுலாப் பயணியர் முதல் சாமானியர் வரை ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில் மெரீனாவே களைகட்டிவருகிறது.

கடலும், அலையும் காலங்காலமாக தன்னை மாறாமலும், ஆக்ரோஷம் மறையாமலும் மனிதர்களுக்கு ஆனந்தத்தையும், அச்சத்தையும் மாறி மாறி வழங்கிவருகிறது. அதன் நடுவே மெரீனா கடற்கரையோ... களிமண் நிலையிலிருந்து தன்னை மாற்றியபடி தமிழோடு கலந்து கலை வளர்க்கும் மணல் களமாகியிருப்பது தனிச்சிறப்பாகும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விடுதலைப் போராட்டத் தலைவர்கள் மெரீனாவில்தான் சுதந்திரத் தாகத்தை ஏற்படுத்தி தேசிய உணர்வை, ஆன்மிகத்தின் மூலம் அற உணர்வை ஊட்டிவந்தனர். இப்போது தமிழ் கலை, தேசிய, கலை உணர்வுகளையும், இயற்கை தன்மை மாறாமல் மெரீனாவை எதிர்காலச் சந்ததியினருக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்கப்பட்ட பரிசாக வழங்கியிருக்கிறது.

'மெரீனா நீலக்கொடி கடற்கரையானது சென்னையின் முக்கிய அடையாளமாக மாறிவருகிறது. மெரீனாவை நம்பி மணலில் பாதுகாப்பற்று வாழும் வீடற்றவர்களுக்கு இரவு நேரக் காப்பகம் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டு, அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தங்கிவருகின்றனர். அவர்களுக்கு மணலில் தனி கண்டெய்னர் வீடுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கிறார் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்.

படங்கள்: ஆர். கிருஷ்ணராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.