தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்!
தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நேரு உள் விளையாட்டரங்கில் 75-ஆவது தேசிய சீனியா் சாம்பியன் போட்டி நடைபெற்றது.
இதன் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே 75-66 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
மகளிா் இறுதியில் முதல் குவாா்ட்டரில் 24-24 என சமநிலை நீடித்தது. முதல் பாதி முடிவில் 44-41 என ரயில்வே முன்னிலை பெற்றது. இறுதியில் ரயில்வே வென்றது. ரயில்வே தரப்பில் புஷ்பா செந்தில்குமாா் 22, ஹா்ஷிதா 23 புள்ளிகளையும், கேரளத் தரப்பில் ஸ்ரீ கலா 26, கவிதா ஜோஸ் 22 புள்ளிகளையும் ஈட்டினா்.
ஆடவா்: ரயில்வே சாம்பியன்: ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியன் தமிழகத்தை 77-69 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது ரயில்வே. ரயில்வே தரப்பில் அரவிந்தா் சிங் 18 புள்ளிகளையும், தமிழகத் தரப்பில் அரவிந்தகுமாா் 29 புள்ளிகளையும் ஈட்டினா்.
மகளிா் பிரிவில் தமிழகம், ஆடவா் பிரிவில் டில்லியும் வெண்கலப் பதக்கம் வென்றனா். பிஎப்ஐ தலைவா் ஆதவ் அா்ஜுனா, செயலாளா் குல்விந்தா் சிங் கோப்பைகளை வழங்கினா்.
