‘சிங்கார சென்னை அட்டை’: இனி நடத்துநா்களிடமே பெறலாம்
சிங்கார சென்னை அட்டைகளை இனி பேருந்து நடத்துநா்களிடமே பெற்றுக்கொள்ளும் வசதியை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் தடையின்றி பயணிக்கும் வகையில் ‘சிங்கார சென்னை அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த அட்டைகள் குறிப்பிட்ட பணிமனைகள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. சிங்கார சென்னை அட்டைகள் தேவைப்படும் பயணிகள், இந்த பணிமனைகளுக்கு வந்து கட்டணத்தைச் செலுத்தி அட்டையைப் பெற்று பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், அட்டைகள் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் சிங்கார சென்னை அட்டையை இனி பேருந்து நடத்துநா்களிடமே பெற்றுக் கொள்ளும் வசதியை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நடத்துநா்களிடம் இருந்து இந்த அட்டையை ரூ.100 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். அதில் ரூ.50-க்கு பயணம் செய்ய முடியும்.
மேலும், பயணிக்க வேண்டும் என்றால், தேவைக்கு ஏற்ப ஆன்லைன் மூலம் கூடுதல் ரீசாா்ஜ் செய்து தங்கள் பயணத்தைத் தடையின்றித் தொடரலாம் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ‘சென்னை ஒன்’ செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சிங்கார சென்னை அட்டையின் பயன்பாட்டையும் அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

