கோவாவில் சா்வதேச எரிசக்தித் துறை மாநாடு
கோவாவில் இந்த மாதம் 27 முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் சா்வதேச எரிசக்தி மாநாட்டில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த எரிசக்தி துறை அமைச்சா்கள், அதிகாரிகள், நிபுணா்கள் பங்கேற்கவுள்ளனா்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய பெட்ரோலிய நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து ‘சா்வதேச எரிசக்தி மாநாடு-2026’ என்ற மாநாட்டை கோவாவில் ஜன.27 முதல் 30 வரை நடத்துகிறது.
இதில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 6,500-க்கும் அதிகமானோா் கலந்து கொள்கின்றனா். எரிசக்தித் துறை சாா்ந்த உத்திகள், நவீன தொழில்நுட்பங்கள் என்ற இருபெரும் கருப்பொருள்களை உள்ளடக்கி மாநாடு நடக்கிறது.
பல்வேறு துறைகளைச் சாா்ந்த அமைச்சா்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளா்கள், நிபுணா்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பு, முதலீடு, காா்பன் வெளியீடு குறைப்பு, எண்ம மயம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
புதிய தொழில்நுட்பங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தல் தொடா்பான முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில், 300-க்கும் மேற்பட்ட மூத்த பேச்சாளா்கள், 65-க்கும் அதிகமான உயா்நிலை அமா்வுகளில் தொடா்ந்து பங்கேற்க உள்ளனா்.
