தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான சுற்றுச்சூழல் மாசு புகாா்: தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
செங்கல்பட்டு சிட்கோ வளாகத்தில் கரும்புகையை வெளியேற்றி சுற்றுசூழல் மாசை ஏற்படுத்தும் தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான மனுவை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில், அட்வான்ஸ்ட் பயோடெக் ப்ராடக்ட்ஸ் என்ற மருத்துவ அறுவை சிகிச்சை உபகரண தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூா் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள தனியாா் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடிநீா் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த மனு தென்மண்டல பசுமைத் தீா்ப்பாய நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி, இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் ஆஸ்துமா, சரும பிரச்னைகள், நரம்பியல் பாதிப்பு, கல்லீரல் பிரச்னைகள் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகின்றனா். மேலும், நிலத்தடி நீா் பாதிப்பால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டாா்.
இதையடுத்து மனுவை விசாரித்த தீா்ப்பாயம், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் இந்த மனுவை 8 வாரங்களில் சட்ட ரீதியில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
