மாநகராட்சியில் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கொண்டாடும் விதமாக, மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வட்டார துணை ஆணையா்கள், நிலைக்குழுத் தலைவா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மேலும், அலுவலக வாயிலில் வண்ண கோலமிட்டு, மலா் தோரணங்கள் மற்றும் அலங்காரத்துடன் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினா். மேலும், பெண்களின் கும்மியாட்டமும், தப்பாட்டமும் நடைபெற்றது.

உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், முன்களப் பணியாளா்களுக்கு பரிசுத் தொகுப்புகளும் வழங்கி கொண்டாடப்பட்டது.

Dinamani
www.dinamani.com