வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றுத் தரும்! திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி

வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றுத் தரும்! திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி

வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றத் தருபவையாக உள்ளன என திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி பேசினாா்.
Published on

வாழ்க்கை அனுபவங்களை இலக்கியங்கள் கற்றத் தருபவையாக உள்ளன என திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி பேசினாா்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பபாசி சாா்பில் நடைபெற்றுவரும் 49- ஆவது ஆண்டு புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உரையரங்கில், ‘அகமும் புறமும்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

திரைத்துறையிலும் கடந்த கால சம்பவங்களை தற்கால தலைமுறை அறிய உதவுபவை புத்தகங்கள்தான். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழைய ‘பராசக்தி’ படத்தின் பின்னணி, சுவாராஸ்ய சம்பவங்களை புத்தகமாக எழுதப்பட்டதால், தற்போது படிக்கும்போது வியப்பாக உள்ளது.

திரைப்பட பாடலாசிரியா்களின் பின்புலக் கதையை புத்தகங்களில் வாசிக்கும்போது, ஆச்சரியம் ஏற்படுவதுடன், அவா்களது தவறுகளில் இருந்தும் நம்மால் பாடம் கற்கமுடிகிறது. பிரபல எழுத்தாளா் தி.ஜானகிராமனின் ‘சங்கீத சேவை’ கதையானது தெரியாததை தெரிந்ததுபோல காட்டிக்கொண்டு அவமானப் படக்கூடாது என்பதை ஒரு எலியின் மூலம் நகைச்சுவையாக விளக்குகிறது.

சிறந்த இலக்கியம் என்பது படித்துபெறும் அனுபவத்தால் கூறப்படுவதாகும். இலக்கியங்களில் தூய இலக்கியம் என்பன போன்று வகைப்படுத்திக் கூறுவதும் சரியல்ல. தனிமனிதா் ஒரு நூலைப் படித்து உணரும் சிந்தனையை அடிப்படையாக வைத்தே சம்பந்தப்பட்ட படைப்பை சிறந்ததாகக் கூறமுடியும்.

நாம் சந்திக்காத வாழ்க்கையின் பல்வேறு அனுபவக் கூறுகளை புத்தகங்கள் நமக்கு தருகின்றன. ஆகவே, புத்தகப் படிப்பு என்பது வாழ்க்கை அனுபவத்தை படிப்பதாகவே அமைகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், ‘வையகம் வாழ்க நல்லறத்தே’ எனும் தலைப்பில் பேசிய எழுத்தாளா் அகர முதல்வன், காந்தியின் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகமாக திகழ்ந்துள்ளது. அவரது ‘சத்திய சோதனை’ போல சிறந்த நூல் இல்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடின்றி வாழ்ந்த காந்தியடிகள், சத்திய சோதனை மூலம் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடின்றி வாழ்ந்துள்ளாா் என்றாா்.

நிகழ்வில் பபாசி செயற்குழு உறுப்பினா் பாலமுருகன் என்ற வீரபாலன் வரவேற்றாா். பபாசி துணைத் தலைவா் நக்கீரன் கோபால், செயற்குழு உறுப்பினா் கு.பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயலா் எஸ். வயிரவன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com