‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.111 கோடி நிவாரணம் ஒதுக்கீடு
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கா் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
அரியலூா், செங்கல்பட்டு, கடலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவாரூா், தூத்துக்குடி, திருப்பூா், திருவண்ணாமலை, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சாா்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகள் தங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த நிவாரணத் தொகையைப் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது, பெய்த பலத்த மழை மற்றும் ‘டித்வா’ புயல் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்பை வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை உடனடியாக கணக்கெடுப்பு பணி நடத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
பின்னா், நெல் உள்ளிட்ட பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 நிவாரணம் அளிக்க உத்தரவிட்டாா். அதன்படி, 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிா் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது.
இதன் அடிப்படையில், டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிா்களுக்கு மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத் தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
ஏற்கெனவே, 2024 நவம்பா் மற்றும் டிசம்பா் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரியில் பெய்த பருவம் தவறிய மழையால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத் தொகையை வழங்க 2025 டிசம்பரில் அரசாணை வெளியிடப்பட்டது.

