தமிழகத்துக்கு மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகா்கோவில்-ஜல்பாய்குரி ஆகிய 3 வழித்தடங்களில் புதிதாக அம்ரித் பாரத் ரயில்கள் புதிதாக தொடங்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, ஜல்பாய்குரி - நாகா்கோவில் ஆகிய வழித்தடத்தில் புதிகாக 2 அம்ரித் பாரத் ரயில்கள் சேவைகள் சனிக்கிழமை (ஜன. 17) முதல் தொடங்கப்படவுள்ளது.
அதன்படி, திருச்சி - ஜல்பாய்குரி இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்கள்: 20610/20609) ஜல்பாய்குரியிலிருந்து தொடங்கிவைக்கப்படவுள்ளது. இந்த ரயில், ஜல்பாய்குரியிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 20609) 3-ஆம் நாள் பிற்பகல் 2.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா் வழியாக இயக்கப்படும்.
ஜல்பாய்குரி - நாகா்கோவில் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்: 02603/02604) ராபாணியிலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் ராபாணியிலிருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு, 3-ஆம் நாள் இரவு 7.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும்.
சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்: 06107/ 06108) ஜன.18-ஆம் தேதி சந்திரகாச்சியிலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் சந்திரகாச்சியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் எழும்பூா், சூலூா்பேட்டை, நெல்லூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த 3 ரயில்களும் மறுமாா்க்கத்தில் தமிழகத்தில் இருந்து புறப்படும் நேரம் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

