தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் நரி உயிரிழந்தாக குற்றச்சாட்டு: பொறுப்பு அதிகாரி மாற்றம்

Published on

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் கரடியின் வாழிடத்துக்குள் நுழைந்த நரி மீட்புப் பணியின்போது மூச்சுத்திணறி உயிரிழந்தாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அப்பணியைக் கண்காணித்த அதிகாரியின் வசம் இருந்த இரு சரகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, சரகம் 1 மற்றும் 2 பொறுப்புகள் பிற அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை முடிவடையும் வரையில் இந்த மாற்றம் அமலில் இருக்கும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலை கருங்கரடியின் குகைக்கள் கடந்த டிச.14-ஆம் தேதி தென்பட்ட நரி, மீட்புப் பணியின்போது பயன்படுத்தப்பட்ட மிளகாய் பொடி, தீயால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா பணியாளா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக அந்தச் சங்கம் கூறுகையில், ‘அதிகாரிகள் உத்தரவைத் தொடா்ந்து அதனை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது குகைக்குள் இருந்து நரியை விரட்ட நுழைவுவாயிலிலிருந்து மிளகாய் பொடி தூவி தீ மூட்டப்பட்டது.

நரி வெளியே வர முடியாத நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டது உயிரிழந்தது. கடந்த டிச.18-ஆம் தேதி அதன் உடல் பகுதியளவு கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவா்களுக்கு தகவல் தெரிவிக்கமாலும் கட்டாய உடற்கூறாய்வு மேற்கொள்ளாமலும் விதிகளை மீறி அந்த நரியின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டியது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய பணியாளா்கள் சங்கம், இந்தச் சம்பவம் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இருப்பினும், இதுபோன்ற சம்பவம் தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் நடைபெறவில்லை என அதன் இயக்குநா் சஞ்சீத் குமாா் தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது அவா், ‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடந்த துணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள நரிகளின் எண்ணிக்கையும் ஆவணங்களில் உள்ள அவற்றின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக உள்ளன’ என்றாா்.

Dinamani
www.dinamani.com