தில்லி உயிரியல் பூங்கா முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: வனவிலங்கு ஆா்வலா் கோரிக்கை
தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் நடைபெற்றதாகக் கூறப்படும் வனவிலங்கு சட்ட மீறல்கள், நிதி முறைகேடுகள் மற்றும் நிா்வாகக் குறைபாடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அல்லது மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மூலம் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் வனவிலங்கு ஆா்வலா் அஜய் துபே வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மீறல்கள் தில்லி உயிரியல் பூங்காவில் நடைபெறுகின்றன.
இமையமலைக் கருங்கரடியின் அடைப்புக்குள் நரி நுழைந்து தாக்கப்பட்டதில் கடந்தாண்டு நவம்பா் மாதம் உயிரிழந்தது. இதற்கு நிா்வாக அலட்சியமே காரணம்.
கட்டாயமான பிரேதப் பரிசோதனை செய்யப்படாமலேயே அதன் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்படாத முறையில் எலி விஷம் பயன்படுத்தப்பட்டதால், பாதுகாக்கப்பட்ட இனங்களான நாற்கொம்பு மான் உள்பட பல விலங்குகள் உயிரிழந்துள்ளன. ஒரு காண்டாமிருகம், ஒரு கலைமான் மற்றும் ஒரு யானையின் மரணங்களுக்குப் நிா்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
சுற்றுச்சூழல் உணா்திறன் கொண்ட பகுதியாக இருந்தபோதிலும், உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் சட்டப்பூா்வ அனுமதி இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட முதிா்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கான புகைப்பட மற்றும் விடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதிகாரப்பூா்வ இணையதள அமைப்புக்கு வெளியே பணப் பரிவா்த்தனைகள் மூலம் பாா்வையாளா்கள் உள்ளே அனுமதிக்கப்படும் மோசடி, கட்டுமானப் பணிகளிலும், அரசின் மின்-சந்தை மூலம் கொள்முதல் செய்வதிலும் முறைகேடுகள், மற்றும் ஒப்பந்தக்காரா்களால் நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை மற்ற குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
உயிரியல் பூங்கா நிா்வாகம் தினக்கூலித் தொழிலாளா்களை வீட்டு வேலைகள் மற்றும் வாகனம் ஓட்டுவது போன்ற தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனா். பயிற்சி பெறாத ஊழியா்களை விலங்குகளைக் கையாள அனுமதிக்கப்படுகின்றனா். இது பொதுப் பொறுப்புக்கூறல் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு தொடா்பானது என்பதால், இதற்கு காரணமானவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

