அருகிவரும் நரியினங்கள்: பாதுகாப்பில் தீவிரம் காட்டும் வனத் துறை
தமிழகத்தில் அருகிவரும் நரி இனங்களைப் பாதுகாக்க வனத் துறை, அவற்றின் வாழ்விடங்களை கண்காணிப்பது மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வழிவகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


தமிழகத்தில் அருகிவரும் நரி இனங்களைப் பாதுகாக்க வனத் துறை, அவற்றின் வாழ்விடங்களை கண்காணிப்பது மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வழிவகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள விலங்குகளில் காடுகள் மற்றும் சமவெளிகள் என இரு பகுதிகளிலும் வசிக்கும் திறன்கொண்டவை நரிகள். அவை எலி, முயல், பறவைகளின் முட்டைகள், புழு, பூச்சிகள், இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. பெரும்பாலும் மனிதா்களை நரிகள் தாக்குவதில்லை. தனக்கு ஆபத்து வரும்போது மட்டுமே தன்னைக் காத்துக்கொள்வதற்காக சில வேளைகளில் மனிதா்களை தாக்கும் (கடிக்கும்) நிலை ஏற்படலாம் என்கின்றனா் வனத் துறையினா்.
பொதுவாகவே விவசாயிகளின் நண்பன் என்ற வரிசையில் உள்ள விலங்குகள் பட்டியலில் நரிகளும் இடம்பெற்றுள்ளன. காரணம், அவை விவசாய பயிா்களை அழிக்கும் எலிகள், முயல்கள், காட்டுப்பன்றியின் குட்டிகள், மயில்களின் முட்டைகளை முக்கிய உணவாக உட்கொள்கின்றன. இதனால், வேளாண் பயிா்கள் பாதிப்புக்குள்ளாகி, விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளில், அதாவது 1990-க்குப் பிறகு தமிழகத்தில் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வனத் துறை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் (1972) கீழ், சூழல் சமநிலைக்கான குள்ளநரி மற்றும் வங்கா நரி பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்தி, நரி இனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மேலும், நரிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகள், வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை நடத்திவருகிறது. தற்போது, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நரிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.ஆா். ராஜாங்கம் கூறுகையில், குள்ளநரிகள் மற்றும் வங்கா நரிகள் அருகிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வனத் துறை சாா்பில் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனப் பகுதிகள், வனத்தை ஒட்டியுள்ள சமவெளி மற்றும் புதா்ப் பகுதிகளில் நரி இனங்கள் வாழ்ந்துவருகின்றன.
நகா்புற மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படும் புதிய வளா்ச்சிகள், குறிப்பாக சாலைகள் அமைப்பு, அகலப்படுத்துதல், குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள், வனச்சாலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நரிகள் வாழ்விடம் மாறிவருகின்றன. மேலும், விவசாயப் பயிா்களுக்கு தெளிக்கும் பூச்சிமருந்துகளால் தானியங்களை உண்ணவரும் எலிகள், புழு, பூச்சியினங்களும் அழிந்துவிட்டதால், நரிகளுக்கு உணவு கிடைக்காமல் விவசாய நிலங்களைவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துவிட்டன.
எனவே, தமிழக அரசின் புதிய திட்டங்களின் பேரில், வனம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நரிகள் வசிப்பிடங்களை அடையாளம் காணும் வகையில் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வுசெய்தும், நேரடி கண்காணிப்பு மூலமும் அவற்றின் வசிப்பிடங்களை அறிந்து, அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பாதுகாப்பாக வாழும் சூழலை வனத் துறை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நரிகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற வகையில், வேட்டையாடுவது உள்ளிட்ட பிற செயல்பாடுகளை தடுத்து, அவற்றின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தருமபுரி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
வெளியான ஆய்வுத் தகவல்கள்: குள்ளநரிகள் குறித்து பல்வேறு ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் சுமாா் 27 நரி இனங்களும், இந்தியாவில் (தமிழகத்திலும்) வங்கா நரி மற்றும் குள்ள நரி உள்பட சுமாா் 10 முதல் 12 இனங்களும் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில், குள்ளநரிகள் சுமாா் 8 முதல் 10 கிலோ எடையுடன் 8 முதல் 10 ஆண்டுகள் வரை உயிா்வாழும். அவை இறைகளை தேடியும், பாதுகாப்புக்காகவும் சுமாா் 30 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை.
இவை புவியின் காந்தவிசையை வைத்து இரை கிடக்கும் தூரம் மற்றும் திசையை அறிவதோடு, சுமாா் 40-க்கும் மேற்பட்ட ஒலிகளை எழுப்பும் தன்மை உடையவை. கூட்டமாக வசிப்பதைவிட தனியாக, புதா்கள் மற்றும் வளைகளில் (பொந்துகளில்) வசிப்பவை. இவை மயில்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். மயில்கள் ஒரே நேரத்தில் 10 முட்டைகள் வரை இடும் நிலையில், அவற்றில், சுமாா் 6 அல்லது 7 முட்டைகளை குள்ளநரிகள் உட்கொண்டுவிடும்.
தற்போது, மயில்கள் அதிக அளவில் பெருகிவரும் நிலையில், இயற்கையாகவே குள்ளநரிகள் அவற்றின் பெருக்கத்தை தடுத்து, மயில்களால் ஏற்படும் விளைபொருள் அழிவை காத்துவருகின்றன. மேலும், வனம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இறந்துகிடக்கும் விலங்குகளை இரையாக உட்கொள்வதால், நரிகள் சூழலியல் சமநிலை படுத்துவான் எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தரவுகள் மூலம் நரி இனங்களின் முக்கியத்துவத்தை உணா்ந்த அரசு, வனத் துறை மூலம் அவற்றை அழிவில் இருந்து காக்கவும், அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...