சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி
Published on

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி பேராசிரியரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

யுனானி மருத்துவா் கலீல் அகமது, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறேன். இதற்கு முன்பு, சென்னையில் உள்ள அரசு யுனானி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன். எனக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு மருத்துவா் முபஷீரா பேகம் உள்ளிட்ட பலா் புகாா்கள் அளித்தனா்.

இதன் காரணமாக ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். இதையடுத்து விதிகளின்படி தகுதி இல்லாத முபஷீரா பேகத்தை பேராசிரியராக நியமித்தனா். மேலும், அவரை தற்போது யுனானி பொது மருத்துவ மாணவா்களுக்கு முதுநிலை வழிகாட்டியாகவும், தோ்வு மதிப்பீட்டாளராகவும் நியமித்துள்ளனா். இந்த நியமனம் சட்டவிரோதமானது. எனவே, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான காஜா மொய்தீன் ஹிஸ்தி, மருத்துவா் முபஷீரா பேகத்துக்கு மருத்துவப் பாடம் கற்பித்த முன்அனுபவம் இல்லை. ஆனால், 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளதாக போலியான பிரமாண மனுவை தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டாா்.

அப்போது, தனக்கு 20 ஆண்டுகள் பாடம் கற்பித்த அனுபவம் உள்ளதாக மருத்துவா் முபஷீரா பேகம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் யுனானி மருத்துவக் கல்லூரி முதல்வா் தரப்பில், 10 ஆண்டுகளுக்கு மேல் பாடம் கற்பித்த அனுபவம் முபஷீரா பேகத்துக்கு இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விதிகளின்படி மருத்துவா் முபஷீரா பேகத்துக்கு இந்த பதவியை வகிக்க தகுதியில்லை என்று மனுதாரா் கூறுவதை ஏற்க முடியவில்லை, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com