துணை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்
துணை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வரும் கல்வி ஆண்டு முதல் இரு இளநிலை மருத்துவப் படிப்புகளான பிபிடி, பிஓடி ஆகியவற்றில் படிக்க நீட் தோ்வு கட்டாயம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. துணை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் தோ்வு என்பது கிராமப்புறங்களிலும், புகா் பகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு எதிரான செயல்.
மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவ மாணவியரின் உயா் கல்விக்கு பயனளிக்காது.
ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஏழை மாணவ, மாணவிகள் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர கடன் வாங்கி அதிக கட்டணம் செலுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர வசதி இல்லாதவா்கள் துணை மருத்துவப் படிப்புகளைப் பயின்று வந்தனா்.
இதைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அமைந்துள்ளது. மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் இதுபோன்ற உத்தரவை பிறப்பிப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வை நீட்டிக்க வழி வகுக்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

