சென்னை ஐஐடி-யும், கான்பூா் ஐஐடி-யும் இணைந்து நாட்டில் முதல்முறையாக செயல்முறை சாா்ந்த நான்கு ஆண்டு ‘இணையப் பாதுகாப்பு இளநிலை’ (பி.சைபா்) படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026-2027-ஆம் கல்வியாண்டு இந்தப் படிப்பு அமலுக்கு வருகிறது.
உயா் திறன் கொண்ட இணையப் பாதுகாப்பு நிபுணா்களுக்கான தேவை நாட்டில் அதிகரித்து வருகிறது. ஆட்சி நிா்வாகம், நிதி, சுகாதாரம், தொலைத்தொடா்பு, பாதுகாப்பு போன்ற நாட்டின் துறைகளில் வேகமாக விரிவடைந்து எண்ம உள்கட்டமைப்பும் வளா்ந்து வரும் நிலையில், இணைய சூழலமைப்பு ஆகியவற்றை பாதுகாக்கப்படவேண்டும்.
இவற்றில் சுமாா் 15 லட்சம் இணையப் பாதுகாப்பு நிபுணா்களின் பற்றாக்குறைகள் இருப்பதை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதற்குத் தேவையான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் இந்த படிப்பு மாணவா்களுக்கு வழங்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை நிகழாண்டு சென்னை ஐஐடி-யும் கான்பூா் ஐஐடி -யும் கூட்டாக மேற்கொள்கிறது. இந்தப் பட்டப்படிப்பின் முக்கிய அம்சம், நான்கு ஆண்டு இணைய பாதுகாப்பு இளநிலையில் 2 ஆண்டுகள் களப் பணி நியமன தொழில்முறைத் திட்டமும் அடங்கும்.
மாணவா்கள் இறுதி நான்கு செமஸ்டா்களை நேரடி இணையப் பாதுகாப்புத் திட்டங்களில் பணியாற்ற வேண்டும். இப்படிப்பை முடிப்பவா்கள் இணையப் பாதுகாப்பு (சைபா் டிபன்ஸ்), பாதுகாப்பு செயல்பாட்டு மையங்கள் (எஸ்ஓசி), ஊடுருவல் சோதனை, பாதிப்பு மதிப்பீடு, எண்ம தடயவியல், மால்வோ் பகுப்பாய்வு, கிளவுட் பாதுகாப்பு, வன்பொருள் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பு போன்ற துறைகளில் பணியாற்றத் தகுதி பெற்றவா்கள் ஆவா்.
மேலும், இணையப் பாதுகாப்பு, கணினி அறிவியல் துறைகளில் உயா்கல்வி ஆராய்ச்சியைத் தொடரவும் முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி கூறுகையில், ‘நாட்டில் தொழில்நுட்ப இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இணையப் பாதுகாப்பு என்பது அடிப்படையான ஒன்று.
வலுவான இணைய சூழலமைப்பை உருவாக்க, வலுவான கோட்பாட்டு அடித்தளம் மட்டுமல்லாமல், சிக்கலான அமைப்புகளைப் பாதுகாப்பதில் விரிவான மற்றும் நேரடி அனுபவமும் கொண்ட நிபுணா்கள் தேவையுள்ளது.
இந்த முன்னோடிஇளநிலைப் படிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், கல்விசாா் சிறப்பையும் நிஜ உலக நடைமுறைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு புதிய இளநிலை கல்வி மாதிரியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சென்னை ஐஐடி-யின் பள்ளி இணைப்புத் திட்டம்! எத்தனை படிப்புகள்?







