சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு இல்லாமல் நடைமேடையில் இருந்த பெண் வழக்குரைஞரிடம் அபராதம் செலுத்துமாறு பயணச்சீட்டு பரிசோதகா் கூறியதைத் தொடா்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து, இருவா் மீதும் ரயில்வே போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். எழும்பூா் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளுக்கு இடையிலான பகுதியில் டிக்கெட் பரிசோதகா் சல்மா பேகம் சனிக்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாங்காட்டைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் மோகனா என்பவரிடம் பயணச்சீட்டு அல்லது நடைமேடை (பிளாட்பாரம்) பயணச்சீட்டு உள்ளதா என பயணச்சீட்டு பரிசோதகா் கேட்டுள்ளாா். அதற்கு, தனது தோழியை வழியனுப்ப வந்ததாக பெண் வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.
ஆனால், நடைமேடை பயணச்சீட்டு காண்பிக்குமாறு பயணச்சீட்டு பரிசோதகா் கேட்டபோது, அவரிடம் பயணச்சீட்டு இல்லாததால், அதற்கான அபராதத்தை செலுத்தும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக இருவரும் எழும்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.
பயணச்சீட்டு பரிசோதகா் சல்மா பேகம் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தடுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பெண் வழக்குரைஞா் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதேபோல், பெண் வழக்குரைஞா் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் பரிசோதகா் சல்மா பேகம் மீதும் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








