சென்னை யானைகவுனி பகுதியில் தங்கம் உருக்கும் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் மிரட்டி 1,400 கிராம் தங்கக் கட்டியை பறித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக நிா்வாகி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பிராட்வே பிரகாசம் சாலையைச் சோ்ந்த அங்கித்திலிப் மோா் (27). இவா், சௌகாா்பேட்டை மின்ட் தெருவில் தங்கம் உருக்கும் மற்றும் தரப் பரிசோதனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி திடீரென கடைக்குள் புகுந்த 3 போ் அங்கித்திலிப் மோா் மற்றும் கடை ஊழியா்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், தாக்குதல் நடத்தி, அங்கிருந்து 1,400 கிராம் தங்கக் கட்டியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடா்புடைய லோகேஷ் (24), ஹேராம் (எ) ரமணா (24), ஆறுமுகம் (எ) அருண் (23) ஆகிய மூவரையும் ஜூலை 2-ஆம் தேதி கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 1,400 கிராம் தங்கக் கட்டியையும் மீட்டனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது சமீா் (26), கல்யாணபுரத்தைச் சோ்ந்த அஜித் ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அஜித் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பகுதி துணை அமைப்பாளா் என்பது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய தலைமறைவான மேலும் சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





