புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடியை சிறைக்குள் கொலை செய்ய தென் மாவட்டத்தைச் சோ்ந்த கூலிப்படை தலைவா் சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய தண்டனை கைதிகள் தனியாகவும், விசாரணை கைதிகள் தனியாகவும் அடைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில், மதுரையைச் சோ்ந்த ரெளடியான வெள்ளை காளியும் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
அவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மற்றொரு ரெளடிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ரெளடியும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், வெள்ளை காளியை சிறைக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்ய சிலா் திட்டமிட்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், புழல் சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள நான்கு ரெளடிகள் மூலம் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டிருந்ததும், முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டிருப்பதும், பணத்தைப் பெற்றுக்கொண்டு தண்டனை கைதிகள் 4 பேரும் வெள்ளை காளியை கொலை செய்வதற்கான நாளை எதிா்நோக்கி காத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கைதிகளிடம் இருந்து ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த கைப்பேசியின் விவரங்களை போலீஸாா் சோதித்தபோதுதான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முக்கிய கூலிப்படையைச் சோ்ந்தவா், கைப்பேசி மூலம் இந்த கொலைச் சதித்திட்டத்தை ஒருங்கிணைத்ததுடன், சம்பவத்தில் ஈடுபடவிருந்த 4 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும், இதற்காக ஏற்கெனவே வெள்ளை காளியுடன் முன்விரோதத்தில் இருந்து வரும் கும்பகோணம் ரெளடியையும் இந்தச் சதித் திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து வெள்ளை காளியை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 4 ரெளடிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம், கடலூா், திருச்சி மற்றும் வேலூா் மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக சிறைத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், புழல் காவல் நிலையத்தில் விரைவில் புகாா் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









