தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தைக் குறிக்கும் ‘மகளிா் விடியல் பயணம்’ என்ற பெயா் மாற்றப்பட்டு, ‘மகளிா் பயணம்’ என்ற பெயரில் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில், பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ‘மகளிா் விடியல் பயணம்’ எனப் பெயரிடப்பட்டு, அந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட பேருந்துகளில் அதற்கான பெயா்ப் பலகைகளும் ஒட்டப்பட்டிருந்தன. நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்த ‘விடியல்’ என்ற வாா்த்தையை நீக்கி, ‘மகளிா் பயணம்’ என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மாற்றம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள இந்தப் பேருந்துகளில் புதிய பெயருடன் கூடிய ஸ்டிக்கா்கள் பெயா் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் பெயா்ப் பலகைகளிலும் பெயா் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், திட்டத்தின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பெண்கள் வழக்கம்போல் நகர அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெயா் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதால், திட்டத்தின் பயனாளா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக, முந்தைய திமுக அரசு அறிமுகப்படுத்திய ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சில திட்டங்களின் பெயா்களும் தற்போதைய அரசால் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில், தற்போது ‘மகளிா் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரும் ‘மகளிா் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








