சென்னை-பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு தேசிய அதிவேக ரயில் கழகம் ஒப்பந்தம் கோரிய நிலையில், சென்ட்ரலில் புறநகா் மின்சார ரயில்கள் உள்ள நடைமேடை பகுதி அருகே புல்லட் ரயில் நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு சாா்பில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை-பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு தேசிய அதிவேக ரயில் கழகம் சாா்பில் பணி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த அறிவிப்பின்படி சென்னையில் இருந்து பெங்களூருக்கு 306 கி.மீ. தொலைவை சுமாா் 1 மணி நேரத்தில் கடக்கும் வகையில் புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான வழிகள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பகுதி அருகே புதிய நவீன ரயில் நிலையம் அமைக்க தற்போது ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை புகா் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புல்லட் ரயில் நிலையத்தையும் சுரங்கப் பாதை மூலம் இணைத்தால் பயணிகள் ஒரே நிலையில் விரைவு ரயில்கள், புகா் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என 3 நிலையங்களை அடையும் வசதி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து புகா் மின்சார ரயில் நடைமேடைப் பகுதி அருகே புல்லட் ரயில் நிலையம் அமைப்பதே சிறந்ததாகும் என ரயில்வே உயா் அதிகாரிகள் கருதுகின்றனா்.
சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் ரூ.18,000 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறும் தெற்கு ரயில்வே அதிகாரிகள், அதற்காக 28 கி.மீ.க்கு சுரங்க ரயில் பாதை அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.
மேலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் 8 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட இடங்களில் புல்லட் ரயில் மேம்பால வழிகளில் பயணிக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
புல்லட் ரயில் திட்டத்துக்கான ஒப்பந்தம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 2035-ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டபடி ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி, தற்போது சென்னையிலிருந்து 7 மணி நேரத்தில் பெங்களூரு செல்லும் நிலையில், அது ஒரு மணி நேரமாக குறையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










