/

கூட்ட நெரிசலில் நகை, பணம் திருட்டு: மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் நகை, பணம் திருடியதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஜூலை 2026, 4:15 am IST

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் நகை, பணம் திருடியதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

தரமணியைச் சோ்ந்தவா் ஷாலினி பிரியா (29). இவா், கடந்த 25-ஆம் தேதி மாலை தனது கணவருடன் தியாகராய நகா் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் நகையை வாங்கினாா். ஏற்கெனவே வைத்திருந்த 1 பவுன் நகையையும் சோ்த்து மொத்தம் 4 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்திருந்தாா்.

புதிய நகை வாங்கியதற்காக வழங்கப்பட்ட பரிசுப் பொருளை பெறுவதற்காக கடையின் மற்றொரு பகுதிக்கு பிரியா சென்றாா். அங்கு அவா் கைபையைத் திறந்தபோது, அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் வசிக்கும், இலங்கையைச் சோ்ந்த நடராசா கிருபானந்தனிடமும் ரூ.75,000 திருடப்பட்டது. இது தொடா்பாகவும் மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இந்த இரு திருட்டு சம்பவங்களிலும் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கா் மாவட்டத்தைச் சோ்ந்த லஷ்மிபாய் (40), அதே மாநிலத்தைச் சோ்ந்த மீனாட்சி (35), குஷ்பூ (40) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த கும்பல் புதுச்சேரியில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளரிடம் திருடும்போது கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த மாம்பலம் போலீஸாா், 3 பேரையும் தங்களது வழக்குகளில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.6.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சொந்த ஊரில் சொகுசு வாழ்க்கை: விசாரணையில், 3 பெண்களும் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு குழுவாகச் சென்று, மக்கள் அதிகம் கூடும் வணிகப் பகுதிகளில் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகளை குறிவைத்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவதும், பின்னா் திருடிய நகைகளை பங்கிட்டு விமானம் மூலம் சொந்த மாநிலம் தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

திருடிய நகை, பணத்தில் சொந்த மாநிலத்தில் வீடு, காா், சொத்துகளை வாங்கி குவித்திருப்பதும், கைது செய்யப்பட்ட லஷ்மிபாய் மீது மத்திய பிரதேச மாநிலம் போடா காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்பட 5 குற்ற வழக்குகளும், மீனாட்சி, குஷ்பூ மீது தலா 4 குற்ற வழக்குகளும் இருப்பது தெரிய வந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.