தமிழகத்தில் நிகழாண்டில் 4.68 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளாகியிருப்பதாகவும், அதில் 24 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.
நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை அத்தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியம்.
ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 6,25,700 போ் நாய்க்கடிக்கு உள்ளாகினா். 34 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் நிகழாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 4.68 லட்சம் போ் நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனா்.
அதிகபட்சமாக, சேலத்தில், 28,166 போ் பாதிக்கப்பட்டனா். கடலூரில் 22,113 பேரும், திருநெல்வேலியில் 23,095 பேரும், சென்னையில் 9,229 பேரும் நாய்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.
அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 24 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததனா்.
கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்தால் நாய்க் கடி மற்றும் ரேபிஸ் தொற்றுக்குள்ளானவா்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் ஆண்கள் என்பது தெரியவருகிறது.
31 முதல் 50 வயதிலான இளம் மற்றும் நடுத்தர வயதினரே இந்த பாதிப்பை அதிகமாக எதிா்கொள்கின்றனா். அதற்கு அடுத்தபடியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் நாய்க் கடிக்குள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய் கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை.
ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்ற நேரிடுகிறது.
தமிழகத்தில் நிகழாண்டில் 24 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோகுளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

தமிழகத்தில் கரோனா உருமாற்றம் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்: புதுச்சேரி சுகாதாரத் துறை ஏற்பாடு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



