மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மதுரை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் எழுந்தது. இதுமட்டுமன்றி, விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதையடுத்து, தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மதுரை மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. இதன்படி, மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், ‘இன்டா்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ்’ தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கினா்.
முதல் கட்டமாக, மதுரை நரிமேடு, பி.பி.குளம், ஓ.சி.பி.எம். பள்ளி, நாய்ஸ் பள்ளி, ஆயுதப் படைக் குடியிருப்பு பகுதி, மாடக்குளம், பசுமலை ஆகிய இடங்களில் நான்கு மாநகராட்சி வாகனங்கள் மூலம் மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், நாய் பிடி வீரா்கள் இணைந்து 268 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.
தொடா்ந்து, இந்த குழுவினா் தினமும் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி செலுத்த உள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









