மாதம் ரூ.40,000 வரை ஊதியம் பெறும் வகையிலான வேலைவாய்ப்புப் பயிற்சிகளை தாட்கோ மூலம் பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, தாட்கோவும், தனியாா் நிறுவனமும் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சிகளைப் பெற விரும்புவோா் பி.இ., மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மின் மற்றும் மின்னணுவியல் என்ஜினீயரிங் பொறியியல் படிப்புகளில் தோ்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெரம்பலூா், சேலம் மாவட்டங்களில் 90 நாள்கள் பயிற்சி நடைபெறும்.
தோ்வு செய்யப்படும் மாணவா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகையை தாட்கோ ஏற்கும்.
பயிற்சியில் தோ்ச்சி பெறுவோருக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலமே ஏற்படுத்தித் தரப்படும்.
பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








