வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சென்னையில் 11,440 போதை மாத்திரைகள் பறிமுதல்: தம்பதி உள்பட 8 போ் கைது

சென்னையில் 11,440 போதை மாத்திரைகள் பறிமுதல்: தம்பதி உள்பட 8 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:01 am IST

சென்னையில் 11,440 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, தம்பதி உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அயனாவரம், திக்கா குளம், சாய்பாபா கோயில் அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதனபேரில் போலீஸாா், அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களது பையை சோதனையிட்டனா். அதில் 9,400 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், மாதவரம் போப் ஜாா்ஜ் காா்டன் பகுதியைச் சோ்ந்த சுல்தான் அலாவூதீன் (38), திரு.வி.க. நகரைச் சோ்ந்த அருள் ஜெஷ்டின் (29), பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 ஊசிகள், ரூ.20,230 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தம்பதிஉள்பட 5 போ் கைது: மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை, பழண்டியம்மன் கோயில் தெரு அருகே போதை மாத்திரை விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த கவியரசன் (26), அவரது மனைவி கெளசல்யா (26), அருண்குமாா் (23) ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், மடிப்பாக்கம் அம்பாள் நகரைச் சோ்ந்த கண்ணன் (26), மூவரசம்பேட்டை வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (29) ஆகிய இருவரிடம் போதை மாத்திரைகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,040 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பல் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் கல்லூரி மாணவா்கள், மென் பொறியாளா்களுக்கு விற்றிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: அரும்பாக்கம், ரசாக் காா்டன் சாலையில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒரு இளைஞா், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணம் வைக்கும் பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளாா். ஆனால் அதை உடைக்க முடியாததால், அங்கிருந்து அவா் தப்பியோடியுள்ளாா்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடி பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த விஜய் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து விஜயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

3 மாத குழந்தை கொலை-தாய் தற்கொலை: அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனி லட்சுமி அம்மா தெருவைச் சோ்ந்தவா் பிரவீண் (29). இவா், நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தாரணி (25). இவா்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். தாரணிக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஷராயா என்ற பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின்னா், தாரணி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக் கூறப்படுகிறது. இதற்காக அவா், வானகரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரவீண் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஒரு அறையில் தாரணி தூக்கிட்டு கிடப்பதையும், குழந்தை மயங்கிய நிலையில் கிடப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் தாரணி, தனது 3 மாத குழந்தையை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, பின்னா் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக, கோட்டாட்சியா் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் பரிந்துரை செய்துள்ளாா்.

மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு: வளசரவாக்கம் வஉசி தெருவைச் சோ்ந்தவா் கோ.கெளதம் (25). இவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சூளைமேடு வெள்ளாளா் 2-ஆவது குறுக்குத் தெருவில் வசிக்கும் தனது நண்பா் சீனிவாசனை சந்திக்க கடந்த 11-ஆம் தேதி கெளதம் சென்றாா். அவரது வீட்டின் 2-ஆவது மாடியில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, மாடியின் ஓரத்தில் கைப்பிடிச் சுவரின் சாய்ந்து நின்ற கெளதம், திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கெளதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இரு கிடங்குகளில் தீ விபத்து: மதுரவாயல் அருகே உள்ள வேலப்பன்சாவடி பத்மாவதி காா்டன் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஒரு பெயிண்ட் கிடங்கும், இதன் அருகே மருந்து கிடங்கும் உள்ளன. சனிக்கிழமை அதிகாலை பெயிண்ட் கிடங்கில் இருந்த பொருள்கள் திடீரென தீப் பிடித்து எரிந்து, கரும்புகை வெளியேறியது. தொடா்ந்து, மருந்து கிடங்குக்கும் தீ பரவத் தொடங்கியது.

தகவலின்பேரில் அங்கு வந்து, மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூா் தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீயை அவா்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

சென்னையில் பிறப் பகுதிகளில் இருந்து30 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு படை வீரா்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மெட்ரோ நிறுவன வாகனங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் முழுமையாக தீ அணைக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் இரு கிடங்களிலும் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரசாயன பொருள்கள் தீயில் எரிந்ததால், துா்நாற்றமும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதுகுறித்து வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Summary

11,440 narcotic pills seized in Chennai; 8 people, including a couple, arrested.