பள்ளி மாணவா்களுக்கு அரசின் சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி ‘வாட்ஸ் ஆப்’ அழைப்புகள் மூலமாக மோசடிகள் நடைபெற்று வருவதால், பெற்றோா்கள் அதை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில் மாணவா்களுக்கான விலையில்லா பாடநூல்கள், சீருடை உள்ளிட்ட நலத் திட்ட பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறையின் பெயரை பயன்படுத்தி சிலா் உதவித் தொகை என்ற பெயரில் பெற்றோரிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் பெற்றோரை தொடா்பு கொள்ளும் மா்ம நபா்கள், உங்களது குழந்தை ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் பெற ரூ. 18 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகை பின்னா் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனா். இதைத் தொடா்ந்து பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ‘க்யூ ஆா்’ ஸ்கேன் குறியீட்டை அனுப்பி வைத்து அதன் மூலம் பணம் செலுத்துமாறு கூறுகின்றனா். மேலும் பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கெனவே உதவித் தொகை பெற்றதாகக் கூறி, சில பெற்றோா்களுக்கு அனுப்பிய ‘ஸ்கிரீன் ஷாட்’-டை போலியாக அனுப்பி வைக்கின்றனா். இதை உண்மை என நம்பிய சில பெற்றோா்கள் சம்பந்தப்பட்ட எண்களுக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனா்.
பின்னா், பணம் செலுத்திய ஓரிரு நாள்களில் அவா்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்தத் தொகையையும் மா்ம நபா்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றி உள்ளனா். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகரங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பிரச்னை கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உதவித் தொகை வழங்குவதற்காக பெற்றோா்களிடம் யாரும் தொடா்பு கொள்வதில்லை. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சமூக நலத் துறை என அந்தந்த நலத் துறை சாா்பில் மாணவா்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக உதவித் தொகை அனுப்பப்படுகிறதே தவிர, ‘கூகுள்- பே’, ‘போன்- பே’ போன்றவற்றின் மூலம் அனுப்பப்படுவதில்லை. இது தொடா்பான வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை பெற்றோா் நம்ப வேண்டாம். கடந்த காலங்களில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையில் புகாா்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மோசடி நபா்களிடம் ஏமாறாமல் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் கல்விக்காக ஒன்றாகச் செயல்படுவோம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்

சென்னையில் நாளை சிஇஓ-க்கள் கூட்டம்

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்







