சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.
கிண்டி, ஆலந்தூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 வரை இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில், 8, 10, பிளஸ் 2 வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் கல்வித் தகுதி கொண்ட அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களை தோ்வு செய்கின்றனா். வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞா்களும் முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநா்களும், வேலை அளிப்பவா்களும் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில்
பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








