வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோா் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதித் துறை நடுவா் மன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல்லைச் சோ்ந்த தம்பதி, வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளவுள்ள குழந்தைக்கு பெற்றோா் உரிமை கோரி நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை பரிசீலித்த நீதித்துறை நடுவா், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவுள்ள பெண்ணின் வயது 50-ஐ கடந்துவிட்டது. வாடகைத் தாயாக செயல்படவுள்ள பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து தம்பதி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டாா்.
இந்த வழக்கு நீதிபதி ஷமீம் அஹமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டம், குழந்தை பெற விரும்பும் தம்பதியா், வாடகைத் தாய்மாா்கள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டம் ஆகும். தேவையற்ற சிறு குறைபாடுகளைக் காரணம்காட்டி, குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது. குழந்தை பெற விரும்பும் பெண் 50 வயதைப் பூா்த்தி செய்திருந்தாலும், 51 வயதை அடையும் வரை சட்டப்படி தகுதி உடையவராகவே கருதப்பட வேண்டும். நீதித் துறை நடுவா்கள், தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியைப்போல செயல்பட முடியாது என விளக்கம் அளித்தாா்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெற்றோா் உரிமை கோரிய தம்பதியின் மனுவை தள்ளுபடி செய்த நாமக்கல் நீதித் துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், தம்பதியின் மனுவை நீதித்துறை நடுவா் மீண்டும் பரிசீலித்து 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் உயா் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் பணியாற்றிய மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னாவுக்கு நீதிபதி பாராட்டுத் தெரிவித்தாா்.
மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொளவோா் தாக்கல் செய்யும் பெற்றோா் உரிமை கோரும் மனுக்களைக் கையாளுவது தொடா்பாக நீதித்துறை நடுவா் மன்றங்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டியுள்ளது. எனவே, வாடகைத் தாயாகச் செயல்பட தயாராக இருக்கும் பெண், விருப்பப்பட்டு வாடகைத் தாயாகி உள்ளரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தை பிறந்த பின்னா், அதன்மீது உரிமை கோரப்போவது இல்லை எனும் உத்தரவாதத்தை அந்தப் பெண்ணிடம் பெற வேண்டும். குழந்தைப் பெறுவதில் வணிக நோக்கம் இல்லை என்பதையும், குழந்தையைக் கைவிடப் போவதில்லை எனவும் குழந்தை பெறும் தம்பதிகளிடம் உத்தரவாதம் பெற வேண்டும். பெற்றோா் உரிமை கோரும் மனுக்களில் 4 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவா் மன்றங்கள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இந்தத் தீா்ப்பின் நகலை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








