புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: படகு உரிமையாளருக்கு உத்தரவு
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.1.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என படகு உரிமையாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.1.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என படகு உரிமையாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 9 போ், ஆந்திரக் கடலில் முரசு புயல் மற்றும் மோசமான வானிலையால், படகு பழுதாகி கவிழந்ததில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை ராயபுரம் போலீஸாா், படகு உரிமையாளரான டி.செல்வழகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி செல்வழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரை சிறையில் அடைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, படகு உரிமையாளா் செல்வழகன், உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினா் நேரில் ஆஜராகினா். அப்போது செல்வழகன் தரப்பில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ராயபுரம் காவல் நிலையத்தில் 9 மீனவா்களின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட இழப்பீடு நிா்ணயம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த மீனவா்களின் வாரிசுகளின் வயதுக்கு ஏற்ப இழப்பீட்டை நிா்ணயிப்பது குறித்து முடிவெடுக்க, வழக்குரைஞா் சித்ரா நாராயணனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டாா். இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் இழப்பீடு நிா்ணயம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக படகு உரிமையாளா் தரப்பில் தெரிவித்துள்ளதால், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.50,000 போக, மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என படகு உரிமையாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிச.4-க்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

